
இதில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் திரண்டதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதற்கிடையே ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே சாவு எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
கலவரம் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு உயர் கமிஷனர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார்.இதற்கிடையே எகிப்து மனித உரிமை குழுவைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் நேற்று அதிபர் ஹோஸ்னி முபாரக்கை சந்தித்தனர். மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
பாராளுமன்றத்துக்கும் அதிபர் பதவிக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அதிபர் முபாரக் மறுத்து விட்டார். இதுகுறித்து எகிப்து அரசின் டெலிவிஷனில் அவர் பேசினார். அப்போது நான் உடனடியாக பதவி விலகி விட்டு நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். நான் எனது எகிப்து மண்ணில் தான் உயிரை விடுவேன் என்றார். ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும். அதில் நான் போட்டியிட மாட்டேன். தேர்தலுக்கு பிறகு நான் பதவியில் நீடிக்க மாட்டேன். பதவி விலகுவேன்.
அமைதியான முறையில் அதிகாரத்தை அடுத்தவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன் எனது மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அவரது பேச்சு போராட்டக்காரர்கள் திரண்டிருந்த கெய்ரோவின் தரிர் சதுக்கத்தில் டெலிவிஷன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
அவரது வேண்டுகோளை ஏற்க பொதுமக்கள் மறுத்து விட்டனர். நீங்கள் (அதிபர் முபாரக்) பதவியை விட்டு விலகும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கோஷம் எழுப்பினர். அவர்கள் தங்கள் கால்களில் அணிந்திருந்த ஷூக்கள் மற்றும் செருப்புகளை ஆவேசத்துடன் காட்டினர். இதனால் இன்றும் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இதற்கிடையே, எகிப்து தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக எகிப்துக்கான முன்னாள் தூதர் பிராங்ன் ஒய்ரை தனது சிறப்பு தூதராக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
No comments:
Post a Comment